Tuesday 19 August 2014

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் அவசியமும் முக்கியத்துவமும் !



புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் அவசியமும் முக்கியத்துவமும் !


இன்றைய சூழ்நிலையில் பெரு நகரங்கள் , சிறு நகரங்கள், கிராமம் என்ற வேறுபாடுகள் எதுவும் இல்லாமல் திரும்பும் திசை எங்கும் வாகனங்கள் வந்துவிட்டன.அனைத்துமே பெட்ரோல், டீசல் போன்ற புதுப்பிக்க இயலாத ஆற்றல்களை பயன்படுத்துபவை தான்.வாரமொரு முறை பெட்ரோல் டீசல் விலை உயர்வதும் அதன் விளைவாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வதும் மக்கள் திண்டாடுவதும் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.எனக்குத் தெரிந்து ஒரு லிட்டர் பெட்ரோல் 50 ரூபாய்க்கு விற்றிருக்கிறது.ஆனால் இன்று ? 




கடந்த ஐந்து வருடங்களில் தான் அதிகமான விலை உயர்வு . காரணம் எடுக்கும் அளவு குறைந்து கொண்டே வருவது,உபயொகிக்கும் அளவு அதிகரித்துக் கொண்டே வருவது தான்.பெட்ரோல் ,டீசல் மட்டுமல்ல, நிலக்கரி போன்ற பொருடகளும் தான்.நம் நாட்டில்  ஆற்றல் சார்ந்த எந்த ஒரு தேவைக்கும் புதுப்பிக்க முடியாத வளங்களைத் தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்  ! இவை அனைத்தும் நம் வளர்சியில் பங்கு கொண்டாலும் நாளைய பற்றாக்குறைக்குப் பின் நம்முடைய எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற பயம் எழாமலில்லை ?


இன்றைய எரிபொருள் தேவைக் கணக்கீட்டின் படி பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்ற புதுப்பிக்க முடியாத ஆற்றல் வளங்கள் இன்னும் 40 ஆண்டுகளில் தீர்ந்துவிடும் என்கிறார்கள். அதற்குள் புதிய வளங்கள் கண்டறியப்பட வேண்டும் அல்லது மாற்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நமது ஆற்றல் சார் தேவைகளுக்கு எதைப் பயன்படுத்தப் போகிறோம் என்பது இன்னும் தெளிவாக முடிவு செய்யப்பட்டிருக்கவில்லை. ஜப்பானில் நீரில் ஓடும் கார் வந்து சோதனை ஓட்ட முயற்சிநடந்து கொண்டிருக்கிறது.இதே போலத் தான் மற்ற மேலை நாடுகளும். ஆனால் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என நினைக்கும் போது ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது. இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தியைத் தவிர வேறு புதுப்பிக்கத் தக்க ஆற்றலில் எந்தவித தொழில்நுட்ப முன்னேற்றமும் அடைந்திருக்கவில்லை. ஒரு உதாரணத்திற்கு தமிழக மின் தேவைக்கு உற்பத்தியாகும் மின்சாரத்தில் 70 % அனல் மின் நிலையங்களில் இருந்து அதாவது நிலக்கரியிலிருந்து எடுக்கப்படுகிறது.


மேற்கத்திய நாடுகள் ஹைட்ரஜனைப் பயன்படுத்தத் தெரிந்த அளவிற்கு நம்முடைய தொழில்நுட்பம் வளர்ந்திருக்கவில்லை.ஹைட்ரஜன் ஆற்றல் மிகவும் ஆபத்தானது எனவே பயன்படுத்தும் பாதுகாப்புக் காரணங்களுக்காக உபயோகிக்கவில்லை என சமாதானம் அடையலாம். ஆனால் பயன்படுத்துவதிலும் பாதுகாப்பிலும் எளிதான சூரிய ஆற்றலை பயன்படுத்துவதில் கூட நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகமாக இருக்கிறதே ? அது தான் குறை ! நம்மைப் போன்ற வளரும் நாடுகளூடன் ஒப்பிடுகையில் இந்தியா சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவதில் பின் தங்கியே இருக்கிறது.


இந்தியாவில் ட்ரிபிள் இ எனப்படும் மின்னனுப் பொறியியல் படிக்கும் மாணவன் சூரிய ஆற்றலைப் பற்றி மேலோட்டமாகப் படிக்கிறானே தவிர தொழில்நுட்ப ரீதியாக படிப்பதில்லை. இந்தியாவின் சூரிய சக்தி தொழில்நுட்பம் எந்த அளவுக்கு உள்ளது என்பது இதிலிருந்தே தெரிந்திருக்கும் .

சூரிய ஆற்றல் மட்டுமல்ல, கடலலை ஆற்றலும் முக்கியமான ஒரு புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் வழங்கி. நீண்ட நெடுங் கடற்கரையைக் கொண்டுள்ள நம் பாரத தேசத்தில் வருங்காலத்திலாவது கவனம் செலுத்த வேண்டும் .இதேபோல,உயிரி ஆற்றல், ஹைட்ரஜன் ஆற்றல், தெர்மல் பவர்பிளாண்ட் எனப்படும் பூமி மைய வெப்ப ஆற்றல் போன்ற இதர புதுப்பிக்கத் தக்க ஆற்றல் மூலங்களிலும் சோதனை அடிப்படையிலான நாம் அடைவதற்கான் முயற்சியை இப்போதே தொடங்க வேண்டும்.

குறைந்தபட்சம் 2020க்குள் இந்தியாவில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் சூரிய ஆற்றலைப் பயன்படுத்தவும், இனிமேல் கட்டப்படும் வீடுகளிலும் கட்டிடங்களிலும் சூரிய தகடை பதிப்பதற்கும் நம்முடைய அரசாங்கங்கள் ஆவண செய்ய வேண்டும் என்பது என் எண்ணம்.


2000 ங்களிலும், 2010 களிலும் வெளிவந்த பயோ டீசல் தொழில்நுட்பங்களை வளரவிடாமல் செய்த உள்ளடி வேலைகளை உலக நாடுகள் தெரிந்து கொண்டு மேலே வருவதற்கு முன்னர் இந்திய அரசே அது குறித்தான விரிவான ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டும்.

அறிவியலுக்கும் தொழில்நுட்பத்திற்கும் வித்தியாசம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது புதுமையை விரும்பாத  பழமைவாதிகளுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள்.இன்றைக்கு  நாம் விடும் ராக்கெட்டுகள், ஏவுகணைகள் , செயற்கைக் கோள்கள் எல்லாமே 30 வருடங்களுக்கு முந்திய அறிவியலின் தொழில்நுட்பங்கள் தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு சொன்னவர் சமீபத்தில் பாரத ரத்னா விருது வாங்கிய விஞ்ஞானி சி.என். ஆர். ராவ். ஆம் அவருடைய கூற்று நூற்றுக்கு நூறு உண்மை.


ஆராய்ச்சியின் போதே தடுக்க நினைக்கும் சிலர், மரபு சார் மற்றும் மரபுசாரா ஆற்றல்களுக்கிடையிலான வித்தியாசங்களையும் புரிந்து கொண்டு அரசியல் லாபம் கருதாமல்  ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அந்நிய நாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் புதுப்பிக்க முடியாத ஆற்றல் வளங்களுக்கு செலவிடும் தொகையில் சிறு பகுதியை இத்தகைய சோதனை முயற்சிகளுக்கும் செலவிட்டால் இந்தியாவும் எதிர்காலத்தை பயமின்றி எதிர்கொள்ளலாம்.


உணர்த்த வேண்டியது நம் மக்கள் . ஆனால் விழித்துக் கொள்ள வேண்டியது அரசும் ஆட்சியாளர்களும் தான். 


கட்டுரையாளர் :

ஜே.ஜெயசீலன்,
புவித்தகவலியல் மூன்றாம் ஆண்டு,
அண்ணா பல்கலைக்கழகம்,
திருநெல்வேலி.

வலைப்பக்க முகவரி :     புதுகை சீலன்